9.08.2009

தந்தூரி பிரியாணி - ரேவதி

தந்தூரி பிரியாணி

தேவையான பொருட்கள் :-

பிரியாணி அரிசி --------- ஒரு கிலோ .
ப்ராய்லர் கோழி ----------ஒரு கிலோ
வெங்காயம் ---இரண்டு
தக்காளி -------இரண்டு.
இஞ்சி ,பூண்டு விழுது ------மூன்று டீஸ்பூன்
மஞ்சள் , மிளகாய் தூள் , தயிர், தேங்காய் பால் , உப்பு எண்ணெய் , ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு, ரோஜா பன்னீர் , புதினா, கொத்தமல்லி ஒரு கட்டு, நெய் ---இவையெல்லாம் தேவையான அளவு.

முதலில் கோழியை சுத்தம் செய்து , அதில் இஞ்சி பூண்டு விழுது , மஞ்சள், மிளகாய் தூள், உப்பு, எல்லாம் கலந்து அரை மணி நேரம் ஊறவைத்து அதன் பிறகு நன்றாக வறுத்து கொள்ள வேண்டும்.

ஒரு அடி கனமான பாத்திரம் வைத்து அதில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி , அதில் லவங்கம், பட்டை, பிரிஞ்சி இலை போட்டு வதக்கி அதில் நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து கொஞ்சம் வதங்கியபிறகு , இஞ்சி பூண்டு விழுது , மஞ்சள் , மிளகாய் தூள், சேர்த்து நன்றாக கலக்கவும். அதன் பிறகு வறுத்து வைத்த கோழியை போட்டு , தக்காளி, நறுக்கிய புதினா, தேவையான அளவு உப்பு சேர்த்து அதிக தீயில் ஐந்து நி்மிடம் வதக்கி அதன் பிறகு நன்றாக பாயில் பேப்பர் போட்டு மூடி தீயை குறைத்து வைத்து வேகவிட வேண்டும் .இருபது நிமிடம் கழித்து திறந்து பார்த்தால் வெங்காயம் தக்காளி எல்லாம் கிரேவி மாதிரி ஆகியிருக்கும். அதில் ஒரு டின் தேங்காய் பால் சேர்த்து , தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். அதன் பிறகு பிரியாணி அரிசியை நன்றாக கழுவி அதில் சேர்த்து நன்றாக கலந்து தீயை மிதமாக வைத்து வேக வைக்கவும். பாதி அளவு அரிசி வெந்ததும் , அதில் ஒரு டீஸ்பூன் ரோஜா பன்னீர், எழுபிச்சை சாறு, இரண்டு டேபிள் ஸ்பூன் நெய், நறுக்கிய கொத்தமல்லி இவற்றை கலந்து போயில் பேப்பர் போட்டு இருக்க மூடி மேலே மூடி போட்டு தீயை சிம்மில் வைத்து தம் போடவேண்டும்.அரை மணி நேரம் கழித்து தீயை நிறுத்தி வைத்து விட்டு ஒரு பத்து நிமிடம் கழித்து திறந்து சூடாக பரிமாறவும்.

இதற்கு ராய்தா உபயோகித்தால் நன்றாக இருக்கும்.

இதன் தயாரிப்பு முறை

தயிர் , பொடியாக நறுக்கிய வெங்காயம் , பொடியாக நறுக்கிய கேரட் , கொத்தமல்லி, உப்பு கலந்து உபயோகிக்கவும்.